கன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரம்... மும்பையில் சொகுசு வாழ்க்கை - சப் இன்ஸ்பெக்டர் கணவர் கைது
கன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரம்... மும்பையில் சொகுசு வாழ்க்கை - சப் இன்ஸ்பெக்டர் கணவர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கவும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தவும் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் இன்று தக்கலை, அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட சொகுசு காரை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் காரை சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த செல்வின் மற்றும் மனோஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பளு தூக்கும் வீரரான செல்வின் கடந்த சில வருடங்களுங்களுக்கு முன் மும்பை சென்று அங்குள்ள ஜிம் ஒன்றில் டிரைனராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு வரும் மும்பையை சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியின் மூலம் அங்குள்ள கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டரான மனைவியின் துணையுடன் , திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த மற்றொரு ஜிம் டிரைனரான தனது நண்பன் மனோஜ் உடன் சேர்ந்து மும்பையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கடத்தி வந்து வரும்போதே கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்வதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் போர்வையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தற்போது விற்பனைக்காக மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து விட்டு நான்கரை கிலோ கஞ்சாவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும் அப்போது போலிசாரிடம் சிக்கி கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சா, 36-ஆயிரம் ரூ ரொக்கம் , கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு அவர்களை தக்கலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment