இலங்கை அதிபர் தேர்தல்!! நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!!976283433
இலங்கை அதிபர் தேர்தல்!! நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!!
பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது.
முன்னதாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார். தான் நேசிக்கும் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, தல்லாஸ் அலகப்பெருமாவை அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக அறிவித்தார்.
பிரேமதாசா விலகலை தொடர்ந்து இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை.
தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், தல்லாஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தல்லாஸ் அலகப்பெருமாவை அதிபராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராகவும் தேர்வு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே சஜித் பிரேமதாசா அதிபர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.
இன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முதல் முறையாக அந்நாட்டு சபாநாயகரும் வாக்களிக்க உள்ளார். 1993- ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இடைக்கால அதிபரை தேர்வு செய்வது இதுவே முதல் முறை. 1993-ல் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் டி.பி.விஜேதுங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்படுபவர் 28 மாதங்கள் அப்பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment